பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பினார் என உங்களுக்கு எப்படி தெரியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் மனுதாரரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு அந்த தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் காரணமாக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கும் தமிழக வெற்றி கழகத்துக்கும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த அதிமுக பெண் வழக்கறிஞர் திரிசூலி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தித்தாள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த நவம்பர் 11ஆம் தேதி டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நான் குற்றம் நடந்ததாக கூறவில்லை. ஆனால் எழுந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தான் கேட்கிறேன்.
ஆளுங்கட்சி எம்எல்ஏ என்ற காரணத்திற்காக வழக்கு பதிவு செய்யாமல் இருக்க முடியாது.
கள்ளக்குறிச்சி ஆட்சியரின் கண்ணியம் மற்றும் மரியாதையை கேள்விக்குறியாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் அளிக்க வேண்டும் என்று காத்திருக்காமல் இருக்கும் தகவல்களை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான உரிய உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு இனறு (நவம்பர் 23) நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், “கள்ளக்குறிச்சி தமிழக வெற்றி கழக எம்எல்ஏ சி. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி தலைமைச் செயலாளரிடமோ அல்லது வேறு எந்த அதிகாரியிடமோ எந்தவித புகாரும் அளிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
இதை கேட்ட நீதிபதி லட்சுமி நாராயணன், “பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு அந்த எம்எல்ஏ ஆபாச செய்திகளை அனுப்பினார் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? உங்களிடம் என்ன உறுதியான ஆதாரம் உள்ளது? செய்தித்தாள் அறிக்கைகளை வைத்து நீங்கள் வேண்டுமானால் செயல்படலாம். ஆனால் என்னால் அப்படி செயல்பட முடியாது. ஒரு ஐஏஎஸ் அதிகாரிகள் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது என்று நினைக்கிறீர்களா? மாவட்ட ஆட்சியரே புகார் அளிக்காத நிலையில் காவல்துறை எப்படி நடவடிக்கை எடுக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?” என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் தலைமைச் செயலாளரிடம் மீண்டும் ஒருமுறை விசாரித்து தெரிந்து கொண்டு, நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதி லட்சுமி நாராயணன் வழக்கு விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.











