திருப்பரங்குன்றத்தில் உள்ள சர்ச்சைக்குரிய தூணில் உச்ச நீதிமன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது தர்கா அருகே உள்ள சர்வே தூணில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நாளை ஒருநாள் தீபம் ஏற்ற உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
அதேசமயம் முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் அரசு தலைமை வழக்கறிஞர், டிஜிபி, அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆனந்த் உள்ளிட்டோருடன் நீண்ட நேரம் ஆலோசனை செய்துள்ளார்.
சர்ச்சைக்குரிய அந்த தூணில் நாளை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றப்படுமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாதுகாப்பு கருதி திருப்பரங்குரங்குன்றத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் பொது மக்களின் நடமாட்டத்தை முறைப்படுத்தவும் மதுரை காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக ட்ரோன் விதிகள் 2016 இன் கீழ் இன்று முதல் நாளை வரை ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை பகுதி, கிரிவலப் பாதை, அடிவாரப் பகுதி ஆகிய இடங்கள் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ட்ரோன்கள் இயக்க வேண்டியவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று மதுரை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை காவல் ஆணையர் தலைமையில் தென் மாவட்டங்கள் உட்பட 12க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 12 எஸ்பிக்கள் தலைமையில் 8 ஏடிஎஸ்பிகள் 52 டிஎஸ்பிக்கள் 132 காவல் ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் 5618 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது..











