திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை வரும் நவம்பர் 4- ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த அக்டோபர் 26- ஆம் தேதி முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதேபோல், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவுக் காவல்துறையினர் தரப்பில் இருந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
காவல்துறை தரப்பில் தாக்கல் செய்திருந்த மனுவில், “தலைமறைவாக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துகுமார் உடனான தொடர்புகள், யார் யாரிடம் எவ்வளவு பணம் பெறப்பட்டுள்ளது? வேறு யார் இதில் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர்?, பணப்பரிமாற்றங்கள் குறித்தும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவரை ஐந்து நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், கடந்த அக்.29- ஆம் தேதி காலை சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த சூழலில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி தாக்கல் செய்த மனு நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபுடுகுமார், “கடந்த செப்.16- ஆம் தேதி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் செப்.18- ஆம் தேதி விசாரணை ஆஜராகினார். அப்போது, அவரிடம் எட்டு மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் 240 கேள்விகள் கேட்கப்பட்டன.
பள்ளிகளுக்கான உரிமம் வழங்குவதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. முறைகேடுகளைத் தடுக்க மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என இருந்த புதுப்பிப்பு நடவடிக்கை தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று 20 ஆண்டுகளாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது கோரிக்கை வைத்த பள்ளிகளையே சாட்சிகளாக மாற்றி, காவல்துறை அவரை குற்றவாளியாக சித்தரிக்கிறது” என்று வாதிட்டார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு போதுமான மருத்துவச் சிகிச்சைகள் அனைத்தும் சிறையில் வழங்கப்பட்டுள்ளது. சிறையில் என்ன உணவு வழங்கப்பட்டது? என்பதற்கான அறிக்கையையும் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம். சிறையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை எனக் கூறுவதை ஏற்க முடியாது” என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நவம்பர் 2- ஆம் தேதி அன்பில் மகேஸ் பொய்யாமொழியை ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு இன்று (நவம்பர் 2) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.
அப்போது, முன்னாள் அமைச்சர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “சிறப்பு சலுகைகள் அளித்ததற்கு முதலில் நன்றி தெரிவித்தார். மேலும், எங்கு விசாரணை நடத்தப்படுகிறதோ? அங்கே வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பதை உயர்நீதிமன்றம் தீர்ப்புகளில் குறிப்பிட்டுள்ளது. அதனால் அன்பில் மகேஸிடம் நடத்தப்படும் விசாரணையையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அனைத்து விசாரணைகளையும் வீடியோ பதிவு செய்ய முடியாது. குறிப்பிட்ட விசாரணையை மட்டுமே வீடியோ பதிவை செய்யலாம்” என்றார்.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, வரும் நவம்பர் 4- ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். அத்துடன், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை மனதாலும், உடலாலும் காவல்துறை எந்த துன்புறுத்தலும் செய்ய கூடாது, காவல்துறை விசாரணையின்போது முன்னாள் அமைச்சர் அன்பிஸ் மகேஷ் பொய்யாமொழியின் வழக்கறிஞர் உடன் இருக்க அனுமதி வழங்கப்படுகிறது. அவரது வழக்கறிஞர் விசாரணையில் பேசுவதைக் கேட்க முடியாத தொலைவில் இருந்து கண்காணிக்கலாம். ஒவ்வொரு நாளும் காவல்துறை விசாரணை முடியும்போதும் 10 நிமிடங்கள் மட்டும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை அவரது வழக்கறிஞ்ர் சந்தித்து பேசலாம் போன்ற நிபந்தனைகளையும் விதித்தார்.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் ஜாமீன் வழக்கு மற்றும் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்கக்கோரிய மனு மீது நவம்பர் 5- ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தார்.











