முக்கிய செய்திகள்
📅
முகப்பு/முக்கிய செய்திகள்/அடையார் ஆனந்த பவனின் பெரும்பான்மை பங்குகள் விற்பனை.. ரூ.1,600 கோடிக்கு வாங்கும் போதி ட்ரீ!

அடையார் ஆனந்த பவனின் பெரும்பான்மை பங்குகள் விற்பனை.. ரூ.1,600 கோடிக்கு வாங்கும் போதி ட்ரீ!

✍️ admin••⏱️ 4 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
அடையார் ஆனந்த பவனின் பெரும்பான்மை பங்குகள் விற்பனை.. ரூ.1,600 கோடிக்கு வாங்கும் போதி ட்ரீ!

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

பிரபல உணவக நிறுவனமான அடையார் ஆனந்த பவனின் (A2B) பெரும்பான்மையான பங்குகளை வாங்குவதற்காக ஜேம்ஸ் முர்டோக் மற்றும் உதய் சங்கரின் போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனம் சுமார் ரூ.1,600 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் அடையார் ஆனந்த பவன் உணவகங்களை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அடையார் ஆனந்த பவன் நிறுவனத்தின் புதிய இயக்குநர்கள் குழுவின் தலைவராக உதய் சங்கர் பொறுப்பேற்க உள்ளார்.

தென்னிந்தியாவில் உணவகங்கள் நடத்துவதிலும், இனிப்பு மற்றும் கார வகைகளைத் தயாரித்து விற்பனை செய்வதிலும் அடையார் ஆனந்த பவன் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகாவில் அதிகமான கிளைகளைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் தனது கிளைகளை விரிவுபடுத்தி வருகிறது.

தற்போது இந்தியாவில் 160 கிளைகளும், வெளிநாடுகளில் 30-க்கும் மேற்பட்ட கிளைகளும் உள்ளன. இந்த நிறுவனத்தில் 15,000-க்கும் அதிகமானோர் வேலை செய்து வருகின்றனர். பல தலைமுறைகளாக மக்களிடம் நன்கு அறிமுகமான உணவகங்களில் அடையார் ஆனந்த பவனும் ஒன்று. குறிப்பாகத் தென்னிந்திய உணவு வகைகள், இனிப்பு மற்றும் கார வகைகளுக்காக இந்த நிறுவனம் பிரபலமாக உள்ளது.

போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனம், மக்களிடம் ஏற்கெனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து, அவற்றின் வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருகிறது. புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிகமான வாடிக்கையாளர்களைச் சென்றடைவதும் இந்த நிறுவனத்தின் திட்டமாக உள்ளது. அந்த வகையில் தற்போது அடையார் ஆனந்த பவன் நிறுவனத்தில் முதலீடு செய்கிறது.

ஜேம்ஸ் முர்டோக், உதய் சங்கர் என்ன சொல்கிறார்கள்?

இதுகுறித்து போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களான ஜேம்ஸ் முர்டோக் மற்றும் உதய் சங்கர் ஆகியோர் கூறியிருப்பதாவது: அடையார் ஆனந்த பவன் நிறுவனம் பல ஆண்டுகளாக உணவுகளின் தரத்தைத் தொடர்ந்து பராமரித்து வருவதால், லட்சக்கணக்கான குடும்பங்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் நிறுவனர்களான கே.டி. சீனிவாச ராஜா, கே.டி. வெங்கடேசன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி.

அவர்களுடன் சேர்ந்து அடையார் ஆனந்த பவன் நிறுவனத்தை இன்னும் பெரிய அளவில் வளர்க்க விரும்புகிறோம். சிறந்த நிர்வாகத்துடன் செயல்படும் நிறுவனமாகவும், இந்திய உணவுத் துறையில் மற்ற நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாகவும் இதை மாற்ற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

இந்தியாவில் அடையார் ஆனந்த பவன் ஏற்கெனவே பெரிய நிறுவனமாக உள்ளது. சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் இந்த நிறுவனம் அதிகமான கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருவது எங்களைக் கவர்ந்துள்ளது. அடையார் ஆனந்த பவன் நிறுவனத்துடன் இணைந்து, அதன் பாரம்பரிய உணவு வகைகளை உலகம் முழுவதும் இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு செல்ல விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இயக்குநர்கள் குழுவின் தலைவராக உதய் சங்கர்

அடையார் ஆனந்த பவன் நிறுவனத்திற்குப் புதிதாக அமைக்கப்படும் இயக்குநர்கள் குழுவின் தலைவராக உதய் சங்கர் பொறுப்பேற்க உள்ளார்.

அடையார் ஆனந்த பவன் பின்னணி

அடையார் ஆனந்த பவன் நிறுவனத்தின் தொடக்கத்துக்குக் காரணமானவர் கே.எஸ். திருப்பதி ராஜா. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் சென்னையிலும் மும்பையிலும் உணவகங்களில் வேலை செய்தார். உணவகத்தில் டேபிள் கிளீனர் வேலையையும் செய்துள்ளார். பின்னர் இனிப்பு வகைகளைத் தயாரிக்கக் கற்றுக்கொண்டார்.

சொந்த ஊரான ராஜபாளையத்துக்குத் திரும்பிய திருப்பதி ராஜா, விவசாயத்தில் ஈடுபட்டார். விவசாயத்தை விரிவுபடுத்தக் கடன் வாங்கினார். ஆனால், விவசாயத்திலும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மீண்டும் இனிப்பு தயாரிக்கும் தொழிலில் கவனம் செலுத்தினார்.

1960-ல் ராஜபாளையத்தில் தொடங்கிய இனிப்புக் கடை

1960-ஆம் ஆண்டு ராஜபாளையத்தில் ‘குரு ஸ்வீட்ஸ்’ என்ற சிறிய இனிப்புக் கடையைத் தொடங்கினார் திருப்பதி ராஜா.பின்னர் 1970-களின் மத்தியில் பெங்களூருக்குச் சென்ற அவர், மல்லேஸ்வரம் பகுதியில் ‘சீனிவாசா ஸ்வீட்ஸ்’ என்ற கடையைத் தொடங்கினார்.

இந்தத் தொழிலில் அவரது மனைவியும் மகன்களான கே.டி. வெங்கடேசன், கே.டி. சீனிவாச ராஜா ஆகியோரும் உதவினர். குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக மகன்கள் படிப்பைத் தொடராமல் கடை வேலைகளில் ஈடுபட்டனர்.

1979-ல் சென்னைக்கு வந்த ஆனந்த பவன்

1979-ஆம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் ‘ஸ்ரீ ஆனந்த பவன்’ என்ற பெயரில் இனிப்புக் கடையைத் தொடங்கினர். இந்தக் கடைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, சென்னை அடையாறிலும் கிளை தொடங்கப்பட்டது. அடையாறு கிளை பிரபலமானதால், நிறுவனத்தின் பெயர் ‘அடையார் ஆனந்த பவன்’ என மாற்றப்பட்டது.

அடையாறு பிரம்மஞான சபை வளாகத்தில் உள்ள பெரிய ஆலமரத்தைப் போலத் தங்களது நிறுவனமும் பல இடங்களில் கிளை பரப்பி வளர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்ததாக சீனிவாச ராஜா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். 1988-ஆம் ஆண்டில் அடையார் ஆனந்த பவன் என்ற பெயர் பயன்பாட்டுக்கு வந்தது.

இனிப்புக் கடையிலிருந்து உணவகமாக வளர்ச்சி

ஆரம்பத்தில் இனிப்பு, கார வகைகளை மட்டுமே விற்பனை செய்து வந்த அடையார் ஆனந்த பவன், பின்னர் சாட், ஜூஸ் உள்ளிட்டவற்றையும் விற்பனை செய்யத் தொடங்கியது. 2000-ஆம் ஆண்டில் உணவகத் தொழிலிலும் இறங்கியது. புதுச்சேரியில் தொடங்கப்பட்ட உணவகத்துக்கு A2B என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது. பின்னர் இட்லி, தோசை, பொங்கல், சாப்பாடு உள்ளிட்ட சைவ உணவுகளையும் விற்பனை செய்யத் தொடங்கியது.

தந்தைக்குப் பிறகு மகன்கள்

2001-ஆம் ஆண்டு திருப்பதி ராஜா காலமானார். அதன்பிறகு அவரது மகன்களான கே.டி. வெங்கடேசன், கே.டி. சீனிவாச ராஜா ஆகியோர் நிறுவனத்தை நிர்வகித்து வந்தனர்.

வெங்கடேசன் உணவு தயாரிப்பு, புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளிலும், சீனிவாச ராஜா நிறுவனத்தின் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நிர்வாகப் பணிகளிலும் கவனம் செலுத்தினர். பின்னர் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையினரும் நிறுவன நிர்வாகத்தில் பங்கேற்கத் தொடங்கினர்.

வெளிநாடுகளிலும் கிளைகள்

தமிழ்நாட்டில் தொடங்கிய அடையார் ஆனந்த பவன், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விரிவடைந்தது. பின்னர் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் கிளைகள் தொடங்கப்பட்டன.

 

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
திருமலையில் 21 ஸ்மார்ட் பேருந்து நிலையங்கள்: ரேமாண்ட்ஸ் நிறுவனம் அமைக்கிறது
இந்தியா•

திருமலையில் 21 ஸ்மார்ட் பேருந்து நிலையங்கள்: ரேமாண்ட்ஸ் நிறுவனம் அமைக்கிறது

திருப்பதி ஏழு​மலை​யானை தரிசனம் செய்ய தின​மும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் திரு​மலைக்கு வந்து செல்​கின்​றனர். இவர்​களின் வசதிக்​காக திரு​மலை​யில் ‘தர்ம ரதம்’ என்​னும் பெயரில் 50 பேட்​டரி பேருந்​துகள் இலவச​மாக இயக்கப்படுகின்றன. திரு​மலை​யில் ஆட்​டோக்​கள், ரேபிடோ உள்​ளிட்ட வசதி​கள் இல்லாததால், பக்​தர்​களுக்கு இலவச பேருந்து வசதியை திருமலை திருப்​பதி தேவஸ்​தானம் ஏற்​படுத்தி கொடுத்​துள்​ளது. இந்தப் பேருந்​துகள் எப்​போது வரும்? எங்கு செல்​லும்? என்​பது குறித்து சமீபத்​தில் ‘வெங்​க​டாத்​ரி’ செல்​போன் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்​நிலை​யில், இலவச பேருந்​துகள் நின்று […]

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக அறிவிப்பு
தமிழகம்•

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக அறிவிப்பு

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை (நவம்பர் 14) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், வரும் நவம்பர் 15-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும், இது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. புயல் உருவானால் அதற்கு ‘அக்வான்’ என பெயரிப்படும்.

தமிழக ரேஷன் கடைகளில் தரம் உயர்ந்த அரிசி விநியோகம்
தமிழகம்•

தமிழக ரேஷன் கடைகளில் தரம் உயர்ந்த அரிசி விநியோகம்

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தரத்திலான அரிசியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது புழுங்கல் அரிசியில் 16%, பச்சரிசியில் 25% வரை உடைந்த அரிசி இருக்க அனுமதி உள்ள நிலையில், இனி புழுங்கல் அரிசியில் 5%, பச்சரிசியில் 10% மட்டுமே உடைந்த அரிசி இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட அரிசி விநியோகம் ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் சோதனை அடிப்படையில் தொடங்கி, அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தில் அமலுக்கு […]

சீனாவுடன் தைவான் இணைவது நிச்சயம்: ஜி ஜின்பிங் உறுதி
உலகம்•

சீனாவுடன் தைவான் இணைவது நிச்சயம்: ஜி ஜின்பிங் உறுதி

நவீன சீனாவின் தந்தை சன் யாட்-சென்னின் 160-வது பிறந்தநாள் விழா, நேற்று பீஜிங்கில் உள்ள மக்கள் மாளிகையில் மிக விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், வரலாற்றின் ஓட்டத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று குறிப்பிட்டார். மேலும், தாய்நாடான சீனாவுடன் தைவான் முழுமையாக இணைவது நிச்சயம் நடக்கும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →