இந்திய கிரிக்கெட்டின் 15 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்திய சீனியர் அணியில் விளையாடிய மிக இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இவர், ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியையும் வென்று இருக்கிறார்.
2026 துலீப் கோப்பை தொடரில் கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாக தனது 15 வயதிலேயே வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இளம் வயதிலேயே கேப்டன்சி போன்ற தலைமைப் பொறுப்புகளை அவர் மீது சுமத்துவது சரியான அணுகுமுறை அல்ல என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் எச்சரித்துள்ளார். அவசரப்படாமல் நிதானமாக அவரை வளர்த்தெடுக்க வேண்டும் என்று சச்சின் கேட்டுக் கொண்டுள்ளார்.
ரெட்டிட் தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய சச்சினிடம், “15 வயதிலேயே வைபவ் சூர்யவன்ஷிக்கு கேப்டன்சி பொறுப்புகள் வழங்கப்படுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின், “துலீப் கோப்பை போன்ற தொடரில் இவ்வளவு இளம் வயதிலேயே அவருக்கு துணை கேப்டன் பதவி கொடுத்தது மிகவும் அவசரமான முடிவு. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் அதிகமான போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு படியாக நிதானமாக எடுத்து வைக்க வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய சச்சின், வெளிநாட்டு வீரர்களில் ஜோ ரூட், ஹாரி புரூக் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் ஆட்டம் தமக்கு மிகவும் பிடிக்கும் என்றார். தனது டெஸ்ட் ரன் சாதனையை நெருங்கி வரும் ஜோ ரூட் குறித்துப் பேசிய அவர், ரூட்டின் முதல் போட்டியிலேயே அவர் ஒரு மாபெரும் சாதனையாளராக வருவார் என்பது தமக்கு தெளிவாகத் தெரிந்தது எனக் குறிப்பிட்டார்.
அதே சமயம், இந்திய டி20 அணியில் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் நிலையான தொடக்க ஆட்டக்காரர்களாக உள்ளதால், வைபவுக்கு சில போட்டிகளில் ஆடும் லெவனில் கூட இடம் கிடைக்கவில்லை. தற்போது சச்சினும், இளம் வீரரை அவசரப்படுத்தாமல் பக்குவமாக கையாள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இந்திய அணி பயிற்சியாளர் கம்பீர் வைபவ் சூர்யவன்ஷிக்கு அவசரகதியாக பிளேயிங் 11-இல் வாய்ப்பு தராமல் அவரை காக்க வைத்து இருப்பது சச்சின் கூறியதை போன்றே சரியான முடிவாக அமைந்துள்ளது.










