பெரியார் அறிவுலக நூலகத்தில் புத்தகங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், பொது நூலக இயக்குநராக இருந்த ஜெயந்தி ஐஏஎஸ் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதாவது, பெரியார் அறிவுலக நூலகத்திற்கு ’அகல் விளக்கு பதிப்பகம்’ என்ற பதிப்பகத்தில் இருந்து பல லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், வழக்கமாக 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் புத்தகங்களின் விலை சுமார் ரூ.1,395 கொடுத்து வாங்கி இருப்பதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், இந்த நூலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கான குழு கடந்த திமுக ஆட்சியில், நவம்பர் மாதம் அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம், திமுக தரப்பிலும் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது நூலகத்துறை இயக்குநர் ஜெயந்தி ஐஏஎஸ்-ஐ மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதில், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக உள்ள ஜெயந்தி ஐஏஎஸ், பொது நூலகத்துறை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், ஜெயந்தி ஐஏஎஸ் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நூலகத்துறை இயக்குநர் பதவி திரும்பப் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து, பொது நூலகத்துறையின் புதிய இயக்குநராக ஷஜீவனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளையில், ஜெயந்தி ஐஏஎஸ் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பொறுப்பில் தொடர்ந்து நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் அறிவுலகத்தில் புத்தகக் கொள்முதல் தொடர்பான சர்ச்சை தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், பொது நூலகத்துறை இயக்குநர் பொறுப்பில் செய்யப்பட்டுள்ள இந்த நிர்வாக மாற்றம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.








