தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளித்த விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக பதிவான வழக்கில் சரணடைந்த முத்துக்குமாரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பணம் பெற்று மோசடி செய்ததாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தரப்பில் அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
400 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சமாக வசூலித்ததாக கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், தற்போது திமுகவில் இருக்கும் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அரசகுமார், ராஜா, சுரேஷ், அன்பில் மகேஸ் ஆகியோர் கைதான நிலையில், அன்பில் மகேஸ் தவிர மற்ற மூவரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். முன்ஜாமீன் கோரி முத்துக்குமார் மற்றும் தினேஷ் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் கடந்த மாதம் 28-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னை ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு முத்துக்குமார் கடந்த 29-ஆம் தேதி காலை சரணடைந்தார். அவரை நவம்பர் 12-ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், முத்துக்குமாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க மத்திய குற்றப்பிரிவு காவல் துறை தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ‘முத்துக்குமாருக்கு உள்ள தொடர்பு, லஞ்சப் பணம் யாருக்கு எல்லாம் கொடுக்கபட்டது, அன்பில் மகேஸ் மற்றும் அரசகுமார் உள்ளிட்டோருக்கு உள்ள தொடர்பு, அவர்களுக்கு எவ்வளவு பணம் அளிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டுமென்பதால், 5 நாள் காவல் வழங்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.









