இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் இணை உரிமையாளரான காவ்யா மாறனுக்கும் கிரீஸ் நாட்டில் நேற்று திருமணம் நடைபெற்றது.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் டிவி நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநர்களுள் ஒருவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் கிரிக்கெட் அணியின் இணை உரிமையாளருமான காவ்யா மாறன் திருமணத்தை கிரீஸ் நாட்டில் நடத்த முடிவு செய்திருந்தனர்.
இதில் பங்கேற்க நெருங்கிய உறவினரகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோருடன் கிரீஸ் நாட்டுக்குச் சென்றார். நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தர்யாவுடன் திருமணத்தில் பங்கேற்கச் சென்றார்.
அனிருத் – காவ்யா மாறன் திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பங்கேற்ற ஸ்டாலின், தயாநிதி மாறன், ரஜினிகாந்த் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மணமக்களை வாழ்த்தினர். சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நவ.21-ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்கின்றனர்.











